August 19, 2014

இளையராஜா நிகழ்ச்சியை புறக்கணிக்க சொன்ன சீமான், இளையதளபதி படத்தை ஆதரிப்பது ஏன்?

2012 ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி கனடா நாட்டில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருந்தது. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களில் சிலர்.

அந்த நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெறக்கூடாது என்று ஒரு சர்ச்சை கிளம்பியது. நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்படுவதையும், அந்த வாரம் முழுக்க மாவீரர் வாரமாக அனுசரிக்கப்படுவதையும் நாம் பலரும் அறிந்ததே. ஆனால் இளையராஜாவின் இந்த நிகழ்ச்சியை எதிர்த்தவர்கள் நவம்பர் மாதத்தை மாவீரர் மாதம் என்ற புதிதாக ஒன்றை கிளப்பினார்கள். அந்த சர்ச்சை தமிழ்நாட்டிலும், வெளிநாட்டு தமிழர்களிடையேயும் முன்னெடுத்ததில் சீமான் முக்கிய பங்கு வகித்தார். இணையதளங்களில் சீமானின் தம்பிகள் இளையராஜாவை துரோகி என்று வர்ணிக்கும் அளவிற்கு போனார்கள்.

https://www.youtube.com/watch?v=fmTDN-MD3Yo
உண்மையில் பார்க்கப்போனால் மாவீரர் மாதம் என்ற எதையும் புலிகளும் அறிவிக்கவில்லை வெளிநாட்டு ஈழத்தமிழர்களும் அனுசரிப்பதில்லை. நவம்பர் மாதத்தில் வெளியாகும் தீபாவளி ரிலீஸ் படங்கள் ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளில் வசூலை குவிக்கதான் செய்கிறது, 2009க்கு முன்னும் பின்னும். ஆனால் நவம்பர் மாதத்தில் ஈழத்தமிழர்களை கேளிக்கைகளில் ஈடுபட வைப்பது போராட்ட உணர்வை மழுங்கடிக்க செய்யும் வேலை என்றெல்லாம் கதை கட்டினார் சீமான். நவம்பர் மாதத்தில் தமிழ் படங்கள் எதுவும் ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளில் வெளியாகக்கூடாது என்று சீமான் சொல்லவில்லை என்பதை கவனிக்கவும்.

யார் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள்? அவர்கள் திட்டமிட்டு சதிசெய்யதான் இப்படி நவம்பர் மாதத்தில் ஏற்பாடு செய்தார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? என்று எதையுமே சீமான் கட்சியினர் வெளிப்படையாக பேசவில்லை.

உண்மையில் இந்த சர்ச்சைக்கு பின்னணி என்ன என்று சீக்கிரத்தில் தெரியவந்தது. வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் பல குழுக்களாக செயல்பட்டுவருகிறார்கள். அதிலும் 2009 இன அழிப்பு போருக்கு பின்பு, விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்த பின்னர், தமிழர் குழுக்களிடையே முரண்பாடுகள் அதிகரிக்கவே செய்தன. இளையராஜா இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது கனடாவில் இயங்கும் ஒரு குழு. அதன் போட்டி குழு ஒன்று அந்த நிகழ்ச்சியை முறியடிக்க செய்த வேலைகளில் ஒன்றுதான் இந்த சர்ச்சை. அதற்கு பணிக்கப்பட்டவர் நம் சீமான்.

இப்போது கத்தி பட விவகாரத்தின் போது சீமான் சொல்கிறார் – “லைக்கா மொபைல் நிறுவனம் தமிழகத்தில் இல்லை. அப்படியிருக்க அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருக்கிறது எனச் சொல்பவர்கள் அந்த நிறுவனம் வர்த்தகத்தை மேற்கொள்ளும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கான எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.”

உண்மையில் இது தர்க்கரீதியாக சரியான வாதம்தான். இங்கிலாந்தில் கணிசமான அளவிற்கு வாழும் ஈழத்தமிழர்கள் இதுவரை லைக்கா மொபைலை புறக்கணிக்க சொல்லி பரப்புரை எதுவும் செய்ததாக நான் அறியவில்லை. கத்தி படம் வெளியானால் அது ஈழத்தமிழர்கள் அதிக அளவில் வாழும் வெளிநாடுகளில் நல்ல விற்பனையாகத்தான் போகிறது. இன்னும் சொல்லப்போனால், யாழ்பாணத்தில் விஜய் கட்-அவுட்டிற்கு பால் அபிசேகம் செய்ய நம் தமிழ்த்தேசிய பிள்ளைகள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் போட்டுக்கொடுக்கும் நிகழ்ச்சி நிரலின்படிதான் ஈழ ஆதரவு போராட்டங்களை தமிழகத்தில் நடத்தவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லையே. தமிழகத்து மாணவர் அமைப்பினர், மிகத்தெளிவாக லைக்கா நிறுவனத்திற்கும் இராஜபக்சேவின் சிங்கள இனவெறி அரசிற்கும் உள்ள தொடர்பினை பட்டியலிட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள்.  முழு அறிக்கை இங்கே. 

ஆனால் இப்பவும் சீமான் தன்னிடம் ஈழத்தமிழர்கள் யாரும் லைக்கா நிறுவனத்தை எதிர்க்க சொல்லவில்லை என்கிறார். அப்படியென்றால் 2012இல் இளையராஜா நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று சீமானுக்கு சொன்ன ஈழத்தமிழர்கள் யார் அல்லது ஈழத்தமிழர் அமைப்பு எது? இப்போது மாணவர் அமைப்பினர் பொறுப்பாக தெளிவாக ஆதாரங்களை ஒரு அறிக்கையாக தயாரித்து வெளியிட்டிருக்கிறார்களே, அதுபோல சீமான் ஒரு ஆதாரத்தையும் இளையராஜா நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு பின்னால் நடக்கும் சூழ்ச்சி இதுதான் என்று விளக்கவில்லை ஏன்?

 கத்தி பட விவகாரம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும் போதே, சிங்கள-இந்திய கூட்டு சதித்திட்டத்தில் உருவாகியிருக்கும் “புலிப்பார்வை” என்ற படத்திற்கு ஆதரவாக சீமான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் சிங்கள் இனவெறி படையால் படுகொலை செய்யப்பட்ட செய்தியும் அது தொடர்பான படங்களும் உலகத்தமிழர்களையெல்லாம் உலுக்கிய செய்திகளாகும். ஆனால் அந்த சிறுவனை குழந்தை போராளியாக சித்தரித்து எடுக்கப்பட்டிருக்கும் “புலிப்பார்வை” என்ற இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்திருக்கிறார் சீமான்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சீமான் பேசிய உரை.

புலிப்பார்வை படத்தினை தயாரித்திருப்பது, மிகப்பெரிய கல்வி வியாபாரியும் ஐ.ஜே.கே என்ற பெயரில் ஜாதிக்கட்சி நடத்திக்கொண்டிருக்கும், பா.ஜ.க / ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து. இந்த நபர் விடுதலைப்புலிகள் குறித்தும் தலைவர் பிரபாகரன் குறித்தும் முன்பு சொன்ன கருத்தினை பாருங்கள் இவர் யார் என்பது விளங்கும்.

 

இவர் பிரபாகரனின் மகனை பற்றி ஒரு படம் எடுக்கிறார் என்றால் அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் சிந்திக்கவேண்டாமா? இவருடைய எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வியாபார கிளையை இலங்கையில் தொடங்க முயற்சிகளை எடுத்துவருகிறார். ஏற்கனவே இது தொடர்பாக தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போதைக்கு எப்படியோ அதை சமாளித்திவிட்டார்கள்.

இந்த பச்சமுத்துவைதான் வணக்கத்திற்கு உரிய பெருந்தமிழர் பாரிவேந்தர் என்று சீமான் விளிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவரை கல்வி வள்ளலாக சித்தரிக்கிறார். இன உணர்வினால் இந்த படத்தை எடுத்திருப்பதாக சான்றிதழ் வளங்குகிறார்.

இப்போது அம்பலப்பட்டு நிற்கும் சீமான் செய்யும் சமாளிப்பு என்னவென்றால், தான் எதை எதிர்க்கவேண்டும் என்று மற்றவர்கள் கட்டளையிடக்கூடாது என்கிறார், தன்னை மட்டும் ஏன் இதை எதிர்க்கவில்லை என்று கேட்கிறீர்கள் என்று பொங்குகிறார், தனக்கு இதைத்தவிர முக்கியமான வேலைகள் ஒரு லட்சம் இருப்பதாக சலித்துக்கொள்கிறார். ஆனால் 2012இல் இளையராஜா நிகழ்ச்சியை அவர் மட்டும்தானே எதிர்த்தார், அது ஏன்? என்னைப்போன்ற பலரும் சீமானை கேள்வி கேட்பது இதனால்தான்.

சீமான் யார், எத்தகைய சந்தர்ப்பவாதி, மோசடிப்பேர்வழி என்பதை விளங்கிக்கொள்வதற்கு அவ்வப்போது அவரே பல வாய்ப்புகளை வழங்கிவருகிறார், அதில் இவையும் ஒன்று!

December 23, 2013

திராவிடர் உயர்கல்வி

கல்வி வணிகமயமாகிவிட்டது. அதிலும் இப்போது உயர்கல்வி என்பது பெரும் பணம் கொழிக்கும் தொழிலாகிவிட்டது. அதுவும் குறிப்பாகத் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள், 550க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள், நூற்றுக்கணக்கான கலை-அறிவியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மேலாண்மை கல்வி நிறுவனங்கள் என்று உயர்கல்விக்கான ஒரு பெரும் சந்தையாகத் தமிழகம் திகழ்வதை நாம் காணமுடிகிறது. அடுத்தக் கட்டமாக வெளிநாட்டுப் பல்கலைகழகங்கள் என்ற பெயரில் பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு இந்தச் சந்தையைத் தாராளமாகத் திறந்துவிடுவதற்கான வேலைகளையும் இந்திய அரசு செய்துவருகிறது.

 

அது சரி, கல்வி வணிகமயமாகிவிட்டது என்று கவலைப்படுவது ஒருபுறம் இருக்கட்டும். சூத்திரன் படித்தாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்ன மனுதர்மத்தின் பெயரால், பலநூறு ஆண்டுகளாய் பெரும்பான்மையான திராவிடர்களுக்கு ஏட்டுக்கல்வியே மறுக்கப்பட்ட இந்த நாட்டில், கல்வி இன்றைக்குப் பெரும் வணிகமாகியிருக்கிறதென்றால் இதுவே பெரும் சமூகப் புரட்சிதானே.

 

இந்த நிலைக்கு நாம் சாதாரணமாக வந்துவிடவில்லை. நூறுஆண்டுகளுக்கு முன்பு, சென்னைக்கு உயர்கல்வி பயிலவரும் பார்ப்பனரல்லாத மாணவர்கள் தங்குவதற்கென்று இடம் கிடையாது. அத்தகைய மாணவர்களுக்காகவே டாக்டர் சி.நடேசனால் 1914இல் சென்னை திருவல்லிக்கேணியில் “திராவிடன் இல்லம்” என்ற மாணவர் விடுதி தோற்றுவிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராகத் திகழ்ந்த, சிறந்த பொருளாதார அறிஞராக விளங்கிய சர்.ஆர்.கே சண்முகம், அந்தத் திராவிடன் இல்லத்தில் தங்கிப் பயின்றவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது. திராவிடர் இயக்கம் தோன்றியதன் அடிப்படை காரணங்களுள் திராவிடருக்கான உயர்கல்வி உரிமை என்பது முதன்மையான ஒன்று.

 

பார்ப்பனரல்லாதாரின் உயர்கல்வி உரிமையை நிலைநாட்டிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையைச் சட்டமாக்கியதைதான் நீதிக்கட்சியின் சாதனைகளுள் முதன்மையாக இன்றளவும் நாம் கொண்டாடுகிறோம். மருத்துவக்கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும் என்ற சமூக அநீதியான விதியைக்கூட நீதிக்கட்சிதான் நீக்கியது. வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை சுதந்திர இந்தியாவில் செல்லாது என்றபோது, அதற்கு எதிராகப் போராடி இந்திய அரசியல் சட்டத்தையே முதன்முதலாகத் திருத்தச் செய்து – தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு உயர்கல்வியில் அரசுபணிகளில் இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்தவர் தந்தை பெரியார்.

 

இன்றைக்கு ஆரம்பக்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தின்படி (Gross Enrollment Ratio) இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகத் தமிழகம் விளங்கும் அதேசமயம் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் வெறும் 18 சதவிகிதமாக உள்ளதையும் கவனிக்கவேண்டும். அதாவது தமிழ்நாட்டில் 18 முதல் 23 வரை வயதுடையவர்களில், 100க்கு 18 பேர்தான் உயர்கல்வியில் சேருகிறார்கள் என்கிறது அரசாங்க புள்ளிவிபரம். உயர்கல்வி சேராத மீதமுள்ள 82 சதவிகிதத்தினரில் ஆகப்பெரும்பான்மையினராகப் பார்ப்பனரல்லாதவர்களே இருப்பார்கள் என்பதையும் நாம் ஊகித்துக்கொள்ளலாம்.

 

உயர்கல்வியைப் பொருத்தவரை நாம் இன்று இரண்டுவிதமான சிக்கல்களைச் சந்திக்கிறோம். முதலாவது, இன்னும் பெரும்பான்மை எண்ணிக்கையிலானவர்களுக்கு உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. இதற்குப் பல்வேறு சமூகப் பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும், மெல்ல மெல்ல உயர்கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கதான் செய்கிறது. இரண்டாவது, உயர்கல்வியில் சேர்ந்தாலும் படித்ததற்கான வேலை கிடைப்பதில் உள்ள பெரும் சிக்கல்.

 

திராவிடருக்கான உயர்கல்வி என்பது பெருகிவரும் தனியார் துறையில் ஏதோவொரு வேலைக்குச் சேர்ந்துக்கொள்வதற்குத் தேவையான கல்வி அல்ல. இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைக்கும் மனிதவளத்தைச் சுரண்டுவதற்காகக் கடைவிரித்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கு வேண்டிய பயிற்சியை நமக்குக் கல்வி என்று கொடுத்து நம்மைத் தயார் செய்யும் வேலையை நாம் மெனக்கடாமல் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

 

உதாரணத்திற்குப் பொறியியல் பட்டப்படிப்பை எடுத்துக்கொண்டால், 2013ஆம் ஆண்டில் 1.25 லட்சம் மாணவர்கள் தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்கள். இவைதவிர 80,000 இடங்கள் நிரப்பப்படாமல் போயுள்ளன. பொறியியல் கல்லூரியில் சேர்வோர் எண்ணிக்கை இப்படி இருக்க, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்போ வருடத்திற்கு அதிகபட்சமாக 30,000 பேருக்குமேல் இல்லை என்கிறார்கள்.

 

பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேலைத்தேடியும் உருப்படியாக எந்த வேலையும் கிடைக்காமல், சொந்த ஊருக்கே சென்று ஏதோவொரு வேலையைச் செய்து கொண்டிருக்கிற பலரை நாம் அறிவோம். இன்றைய காலக்கட்டத்தில் கல்லூரி படிப்பு மட்டுமே வேலைக் கான எந்த உத்திரவாதத்தையும் தந்துவிடாது என்பதுதான் உண்மை. உயர்கல்வியில் ஒருவர் தேர்ந்தெடுக்கும் துறையின் மீது அவருக்கு ஆர்வமும், விருப்பமும் ஏற்படுதல் மிக அவசியம். கல்லூரி பாடப்புத்தகங்களையும் தாண்டி அந்தத் துறை சார்ந்த அறிவை நுட்பங்களைத் தேடி சேகரிப்பவராக இருக்கவேண்டும். கூடுதலாகத் தன்னுடைய அனுபவங்களையும் கருத்துகளையும் அடுத்தவர் மத்தியில் தெளிவாக எடுத்துரைக்கும் திறனை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். அறிவியல், இலக்கியம், கலை, மருத்துவம், பொறியியல், பொருளாதாரம் என்று எதைப் படித்தாலும் அவரவர் துறையில் ஆழ்ந்த அறிவும், புதிய கண்டுபிடிப்பு களைப் படைப்புகளை உருவாக்கும் தன்மையை வளர்த்துக்கொள்ளும் விதமாக உயர்கல்வி என்பது அமைந்திருக்கவேண்டும்.

 

இன்றைக்கும் பல புதிய துறைகளில் அதிகாரம்மிக்க இடங்களில் பார்ப்பனர்கள்தான் ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். உதாரணமாகப் பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றில் உயர் அதிகாரிகளாக அவர்களே அட்சி செலுத்துகிறார்கள். பொருளாதாரம் (Economics), நவீன அறிவியல் (Modern science) தொழில் மேலாண்மை (Business management), நவீன ஊடகம் (Electronic media) போன்ற துறைகளில் நம்மவர்களின் பங்கேற்பு தேவையான அளவிற்கு இல்லை.

 

தொடக்கக்கல்வியைத் தாய்மொழிவழியில் பயில்வதே சிறந்தது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் மேல்நிலை பள்ளிக்கல்வியும் உயர்கல்வியும் ஆங்கிலவழியில் இருப்பது இன்றைய காலத்திற்கு மிக அவசியம். இதன் பொருள் தமிழால் முடியாது என்பதல்ல. உயர்கல்விக்கும் அதைத்தொடர்ந்து மேற்படிப்பிற்கும், வேலை வாய்ப்பிற்கும் ஆங்கிலவழி பயிற்சி தேவை என்கிற போது அதை மேல்நிலைப்பள்ளி அளவிலிருந்தே தொடங்கி விடுவது பொருத்தம் தானே. ஆங்கில வழியில் கல்வி கற்பதனால் ஒருவருக்குத் தமிழ்மொழிப்பற்றோ, தமிழினபற்றோ குறைந்துவிடும் என்பதோ அல்லது தமிழ்வழியில் படிப்பதனால் ஒருவருக்குத் தமிழ் பற்றுக் கூடுதலாக இருக்கும் என்பதெல்லாம் வெறும் ஆதாரமற்ற ஊகம்தானே தவிற உண்மையல்ல. மும்மொழிக்கொள்கையை ஏற்று மலையாளம், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளை கற்று இந்திய அரசின் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகங்களில் அதிகாரத்தைப் பிடித்திருக்கும் மலையாளிகளுக்கு மலையாள மொழிப்பற்றோ, இனப்பற்றோ குறைந்து விடவில்லையே. நாம் மும்மொழிக்கொள்கையை கோரவில்லை, ஆனால் ஆங்கிலவழிக்கல்வியை வலியுறுத்துகிறோம்.

 

ஜாதி ஒழிப்பிலும் சமூகநீதியிலும் பற்றுக் கொண்ட பேராசிரியர் காஞ்சா அய்லையா, இட ஒதுக்கீட்டைவிட அனைவருக்கும் தரமான சமமான ஆங்கிலவழி கல்வி கிடைக்கசெய்யப்படுதல் அவசியம் என்ற கருத்தை தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறார்

 

உயர்கல்வி என்பது ஒருவரது தொழிலையும் அதன் மூலமாக அவரது சமூக பொருளாதார நிலையையும் தீர்மானிக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஜாதியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குலத்தொழிலை விட்டொழிப்பதற்கும், ஜாதியின் உறைவிடமாக விளங்குகிற கிராம வாழ்க்கையை விட்டு வெளியேறுவதற்கும், உலகில் உள்ள மற்ற மக்களைப் போல மானமும் அறிவும் உள்ள சமூகமாக மாறுவதற்கும் உயர்கல்வி என்கிற கருவி பெரிதும் துணைபுரிகிறது. அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எல்லையற்று விரிந்துக்கொண்டிருக்கும் இன்றையகாலத்தில், பொருளாதாரத் தேடுதலுக்கான கதவுகளை உலகமயமாக்கல் உலகம் முழுவதும் திறந்துவிட்டிருக்கும் இன்றைய சூழலில், உயர் கல்வியும் ஆராய்ச்சி மேற்படிப்புகளும், தேர்ந்தெடுக்கும் துறையில் தேடி சேகரிக்கவேண்டிய நிபுணத்துவமும் மிகவும் அவசியமாகிறது.

 

( திருப்பூரில் 2013 அக்டோபர் 20 இல் நடைபெற்ற திராவிடர் வாழ்வியல் விழாவில் வெளியிடப்பட்ட திராவிடர் பண்பாட்டு மலரில் இடம்பெற்ற தோழர் பிரபாகரனின் கட்டுரை)

February 12, 2013

கஞ்சன் பெரியார்

70 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் திருச்சி அரசு மருத்துவ மனைக்குச் செல்கிறார்கள். அங்கு ஒரு பெண்மணி மரத்தினடியில் குழந்தையை பெற்றெடுக்கிறார். இதைக்கண்ட பெரியார் மனம் வெந்துபோய் உடனே அந்தக்காலத்திலேயே ஒருலச்ச ரூபாய் செலவில் பிரசவ விடுதி கட்டித் தருகிறார்கள். இதைக் கேள்விப்பட்டதும் ஈரோட்டிலிருந்து செல்வந்தர்கள் வந்து, ஏனய்யா நீங்கள் பிறந்த ஊரில் கட்டாமல் எங்கேயோ இவ்வளவு பணம் செலவழித்துக் கட்டுகிறீர்களே? என்றனர். தந்தை பெரியார் அதனாலென்ன நீங்கள் அனைவரும் பணக்காரர்கள் தானே, உங்கள் ஊரில் நீங்கள் கட்டுங்களேன் என்றார். நாங்கள் 99 பேர் ஆளுக்கு 1000 ரூபாய் போடுகிறோம், நீங்களும் ஒரு 1000 ரூபாய் கொடுத்தால் நம் ஊரில் கட்டிவிடலாம் என்றனர். அதற்கு அய்யா அவர்கள் ஏன் உங்கள் அனைவரிடமும் ஒருலட்ச ரூபாய் இல்லையா? ஏன் இதுபோன்ற பொதுக்காரியங்களுக்கு கஞ்சத்தனம் செய்கிறீர்கள் என்று சொல்லி, தனது செலவிலேயே ஈரோட்டிலும் ஒரு லட்ச ரூபாயில் பிரசவ விடுதி கட்டினார்… கஞ்சன் பெரியார்..

Image

(தோழர் சிற்பி இராஜன் facebookஇல் பகிர்ந்த தகவல்)

Tags:
February 10, 2013

தமிழகத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக சதி!

தமிழகத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக சதி!

Social Justice

January 22, 2013

புராணங்கள் – வரலாறுகளில் பார்ப்பன சூழ்ச்சிகளும், படுகொலைகளும்

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம், 2010 பிப்ரவரி 27, 28 இல் நடத்திய பெரியாரியல் பயிற்சி முகாமில் வழங்கப்பட்ட கையேடு. (படத்தின் மீது சொடுக்கவும்) 

புராணங்கள் – வரலாறுகளில் பார்ப்பன சூழ்ச்சிகளும், படுகொலைகளும்

தொகுப்பு : விடுதலை க.இராசேந்திரன்

Brahmin adviser

July 1, 2012

பாலாஜி சக்திவேல் : ஏ.ஆர்.முருகதாஸ் – ஓர் ஒப்பீடு

பாலாஜி சக்திவேல் : ஏ.ஆர்.முருகதாஸ் – ஓர் ஒப்பீடு


இடஒதுக்கீடு , பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பதை முக்கிய கொள்கையாக கொண்ட ஒரு அரசியல் கட்சி தலைவரது குடும்ப வாரிசு (உதயநிதி ஸ்டாலின்) தயாரிப்பில்,  இடஒதுக்கீட்ற்கு எதிராகவும், பார்ப்பனியத்திற்கு ஆதரவாகவும் படம் (7ஆம் அறிவு) எடுக்கும் துணிச்சல் கொண்டவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

பார்ப்பன ஆதரவு , இடஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துக்கொண்ட ஷங்கரின் தயாரிப்பில், இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான காட்சிகளை (கல்லூரி) வைக்கும் நேர்மை மிக்கவர் பாலாஜி சக்திவேல்.

*****************************

அறிவுமதி : மனுஷ்யபுத்திரன் – முரண்படும் புள்ளி

(பார்க்க : http://www.youtube.com/watch?v=TvIl364pj1Q)

பாலாஜி சக்திவேல்-ஐ (வழக்கு எண் : 18/9) தான் ஏன் விமர்சித்தேன் என்று விளக்கம் கொடுக்கும்போதுகூட, ‘மணிரத்னம்’ ‘கமலஹாசன்’ போன்ற நல்லப் படம் எடுப்பவர்களைத் தான் என்னால் விமர்சிக்கமுடியும், அதுபோலதான் இதுவும் என்கிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

மணிரத்னம், கமலஹாசன் போன்ற ஆபத்தான இந்துத்துவ  கச்சடாக்களை, அனைத்து ஊடகங்களும்   தூக்கிப்பிடிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை உணர்ந்தவர்களுக்குதான் புரியும், பாலாஜி சக்திவேல் போன்ற நம்மவர்களை, விமர்சனம் என்ற பெயரில் அழித்துவிடாதீர்களய்யா என்று கவிஞர் அறிவுமதி வேண்டிக்கொள்வதன் நியாயம்.

(எனது facebook பதிவுகளின் தொகுப்பு)

June 9, 2012

நாம் தமிழர் கட்சி ஆவணம்

ஆணவத்தால அழிஞ்சவன பாத்திருக்கேன்

ஆவணத்தால் அழிபவனை இப்பதான் பாக்குறேன்

நாம் தமிழர் கட்சி பதுக்கிவைத்திருக்கும் அதன் கொள்கை ஆவணம் கிடைத்துவிட்டது. படிக்க படிக்க பரவசம். ஆணவத்தை தரவிறக்கம் செய்ய, சீமானை ஒரு தட்டு தட்டுங்கள்…Image

September 18, 2011

யார்? யார்? பெரியார்….

தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் பிறந்த நாள் பரிசாக நமக்கு ஒரு அருமையான பாடலை வழங்கியிருக்கிறார்கள் சொல்லிசைக் கலைஞர் சுஜீத்ஜீ மற்றும் இசையமைப்பாளர் சந்தோஸ்.

பாடலை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் @ https://files.me.com/sme2010/eu8x7w.mp3

உங்களது பாராட்டுகளை இங்கே தெரிவியுங்கள் –

சுஜீத்ஜீ @ http://www.facebook.com/SujeethG

சந்தோஸ் @ http://www.facebook.com/profile.php?id=542930173

September 18, 2011

கன்னியாஸ்திரி அபயா கொலைவழக்கும் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலமும்

1

கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி அபயா கொலை சம்பவம்பற்றி பலர் அறிந்திருக்ககூடும். கோட்டயம் நகரில் 19வயது கன்னியாஸ்திரி அபயா, 27 மார்ச் 1992 அன்று தான் தங்கியிருந்த கான்வென்ட் ஹாஸ்டலின் கிணற்றில் பிணமாகக் கிடந்தார். முதலில் விசாரித்த உள்ளூர் காவல்துறை, இதை தற்கொலை என்று சொல்லி 1993 ஜனவரியில் வழக்கை மூடிவிட்டது. ஆனால் அபயாவுடன் படித்துவந்த கன்னியாஸ்திரிகளின் தொடர் போராட்டத்தினால் இந்த வழக்கு சி.பி.ஐ வசம் சென்றது.

மார்ச் 1993இல் தாமஸ் வர்கீஸ் (Varghese P. Thomas, DSP, CBI ) என்ற சி.பி.ஐ அதிகாரி விசாரணையை துவக்குகிறார். வர்கீஸ் தன்னுடைய விசாரணையில் இது தற்கொலை அல்ல கொலை என்று கண்டுபிடிக்கிறார். ஆனால் அவருடைய மேலதிகாரியோ அவரது விசாரணையில் குறுக்கிட்டு இதை தற்கொலை என்று பதிவு செய்யுமாறு உத்தரவிடுகிறார். இதனை ஏற்க மனமின்றி வர்கீஸ் 30 டிசம்பர் 1993’இல் தன்னுடையை வேலையை இராஜினாமா செய்கிறார். அப்போது அவருடைய பணி ஓய்விற்கு 7 ஆண்டுகள் இருந்தன. 19 ஜனவரி 1994இல் வர்கீஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்து, அபயாவின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்றும், அந்த உண்மையை வழக்கில் பதிவு செய்ய தனது மேலதிகாரி அனுமதிக்கவில்லை என்பதனால்தான் இராஜினாமா செய்ததாக அறிவிக்கிறார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகுதான், இந்த வழக்கு அகில இந்தியாவின் கவனத்தையும் பெற்றது. இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கபட்டது. கேரள சட்டமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டது. வர்கீஸை நேர்மையாக செயல்படவிடாமல் தடுத்த, குற்றவாளிகளை காப்பாற்ற முனைந்த அந்த மேலதிகாரியின் பெயர் தியாகராஜன் (V. Thyagarajan, Superintendent of CBI Cochin Unit).

தியாகராஜனை சி.பி.ஐயின் கொச்சின் பிரிவிலிருந்தும், அபயா கொலை வழக்கு விசாரணையிலிருந்தும் விலக்குமாறும் அபயா கொலைவழக்கினை தொடுத்த பொதுமக்கள் இயக்கம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதனை தொடர்ந்து 3 ஜூன் 1994இல், கேரளாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, தியாகராஜனை அபயா கொலைவழக்கிலிருந்து விழக்குமாறு சி.பி.ஐ இயக்குனரிடம் மனு கொடுத்தனர். இதன் விளைவாக தியாகராஜன் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கினை விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ துணை இயக்குனர் ஒருவரிடம் வழங்கப்பட்டது.

(DSP’s controversial resignation
Surprisingly, on 30 December 1993, Varghese P. Thomas resigned from the service of CBI and from the investigation of Abhaya’s death. He had seven more years in service to retire. Varghese P.Thomas was a brilliant and honest police officer and for his meritorious services he was awarded the prestigious President’s National Medal. He had finally arrived at the conclusion that Abhaya’s death was a clear case of murder and he had recorded it as such in the CBI Diary. Subsequently on 19 January 1994, he called a special press conference in Cochin and announced that he had resigned from CBI as his conscience did not permit him to comply with a strong directive given by his superior officer, V. Thyagarajan, the then Superintendent of CBI Cochin Unit, who had asked Varghese P. Thomas to record the death of Abhaya as suicide in the CBI Diary. With this press conference, the case of Sr. Abhaya caught media attention all over India and the matter was strongly debated in the parliament as well as in the Kerala state assembly on several occasions.

Moving to High Court
The Action Council filed another Writ petition in the Kerala High Court asking the court to remove V. Thyagarajan from Cochin Unit of the CBI as well as from the investigation. Further on 3 June 1994 all the MP’s from Kerala State jointly submitted a passionate petition to K. Vijaya Rama Rao, the Director of the CBI requesting him to disallow Thyagarajan to continue in the Abhaya’s murder case. As a result M.L. Sharma, the Joint Director of the CBI, was given charge of the investigation into Abhaya’s death.

The role of V. Thyagarajan in the distortion of Abhaya’s case was apparent in the High Court when Varghese P. Thomas produced an original copy of a report sent by V. Thyagarajan to the Joint Director of the CBI suggesting that further investigation into the death of Sr. Abhaya should be dropped, despite the death being recorded in the CBI Diary as MURDER by Varghese P.Thomas after due consideration of the material facts of the case. As a result, Thyagarajan was transferred to Chennai Unit of CBI.

Reference :  http://www.insidekerala.com/n/index.php?mod=article&cat=specials&article=28454&page_order=1&act=print )

பல ஆண்டுகளுக்கு பிறகு 2008இல், இரண்டு பாதிரியார்களும் ஒரு கன்னியாஸ்திரியும் கைதுசெய்யப்பட்டு, வழக்கு விசாரணை இன்னும் கேரள நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

2008இல் CNN IBN தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த தாமஸ் வர்கீஸ், தன்னுடைய மேலதிகாரி தியாகராஜன் இந்த வழக்கினை தற்கொலை என்று முடிக்க நிர்பந்தித்ததை மீண்டும் பதிவு செய்கிறார். அதற்கான அழுத்தம் அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் அலுவலகத்தில் இருந்து வந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

2

இராஜிவ் கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு இன்று தூக்கு கொட்டடியில் நிற்கிறார் அண்ணன் பேரறிவாளன். வெடிகுண்டை செயல்படுத்த இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழி.  பேரறிவாளன் காவல்துறை விசாரணையின்போது கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்தான் இதற்கு அரசுதரப்பு சாட்சி. கொடுமையான ஆள்தூக்கி சட்டமான தடா சட்டத்தின் கீழ் கைதுசெய்து நடந்த விசாரணை என்பதை நினைவில் கொள்க. பொதுவாக நீதிமன்ற விசாரணையின்போது கொடுக்கப்படும் வாக்குமூலமே ஏற்றுக்கொள்ளப்படும், காவல்துறை விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலம் செல்லாது. ஆனால் தடா சட்டத்தில் காவல்துறை விசாரணையில் கறக்கப்படும் வாக்குமூலமே போதுமான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த வழக்கில் வினோதம் என்னவென்றால், தடா சட்டம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்று அறிவித்த உச்சநீதிமன்றம், காவல்துறை விசாரணையில் கொடுக்கப்பட்ட வாக்குமூலமே போதுமான ஆதாரம் என்ற தடா சட்டத்தின் ஒரு விதியை மட்டும் ஏற்றுக்கொண்டது. அதுவே இன்று பேரறிவாளன் கழுத்தில் தூக்குக்கயிறாக நிற்கிறது.

தடா சட்டத்தின்படி, காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of police) அந்தஸ்த்தில் இருப்பவர் ஒருவர் முன்னிலையில் கொடுக்கப்படும் வாக்குமூலம் மட்டுமே போதுமான சாட்சியாக கோர்ட் ஏற்றுக்கொள்ளும். அந்தவகையில் பேரறிவாளனிடம் வாக்குமூலத்தைப் பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் வேறுயாருமல்ல, அபயாவைக் கொன்றவர்களை காப்பாற்ற துடித்த தியாகராஜனே தான். பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமல்ல, இந்த வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மொத்தம் 17 பேரின் வாக்குமூலத்தையும் “கறந்தவர்” இவரே. இராஜிவ் கொலைவழக்கில் முக்கியமான் அரசுதரப்பு சாட்சி எண்.52: தியாகராஜன், காவல்துறை கண்காணிப்பாளர், சி.பி.ஐ.

காவல்துறை விசாரணை என்பது என்ன, அதில் பெறப்படும் வாக்குமூலம் என்பது எத்தகையது எனபதை நாம் அறிவோம். அறியாதவர்கள் பேரறிவாளன் எப்படி விசாரிக்கப்பட்டார் என்பதை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

“எனது கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் (DECE) என்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். நீதான் வெடிகுண்டு செய்தவனா? நான் மிரண்டு விட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன். அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் என்னை சரியான முறையில் கவனித்தால் ஒப்புக்கொள்வேன் என்று கூறி இரண்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

கீழ்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது ஆய்வாளர்கள் சுந்தரராசன் மற்றும் இருவர் (பெயர் நினைவில்லை) எனது வெற்றுடம்பில் உள்ளங்கையினால் அடித்தனர். ஒருவர் ஷீ காலால் எனது கால் விரல்களை மிதித்தார். திடீரென ஆய்வாளர் சுந்தரராசன் தனது முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டு துன்புறுத்தினர்.

அடுத்த நாள் காலை, மல்லிகை அலுவலத்தின் சித்ரவதைக் கூடம் என அழைக்கப்படும் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர்கள் ரமேஷ், மாதவன், செல்லத்துரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டேன். இவர்கள்தான் அப்போது மல்லிகையில் துன்புறுத்தலில் பெயர் பெற்றிருந்தனர். அங்கு சென்றவுடன் எனக்குக் குடிக்க நீர் மறுக்கப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது, சிறுநீர் கழிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்). அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர்கள் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு, என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூறவேண்டும். அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகை சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவற்றுடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிடமுடியாததாக இருந்தது.

ஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷீ கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இதுபோன்ற நுணுக்கமான கொடுமைகளைச் செய்வார்.

சிபிஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒருநாள் ஓர் ஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் திடீரென எனது இடதுபக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், ஏன்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்? என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான் என்றார். உடனே என்னைத் திரும்பவும் உள்ளே அனுப்பி விட்டனர்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், நான் யார் என்ற விவரம்கூடத் தெரியாமல், என்ன குற்றமிழைத்தார் என்றும் அறியாமல் யாரையாவது அப்பாவிகளைத் துன்புறுத்தி குற்றவாளிகளாக்கி பெயரெடுக்கும் மனப்பான்மையோடு காவல் துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு.

மல்லிகையின் கீழ்தளத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் அலுவலகம் இருந்தது. அவர் திடீரென இரவு 2 அல்லது 3 மணிக்குத்தான் அழைப்பார். எதையாவது கேட்பார். நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால் அடிப்பார். இதுபோல உடல்ரீதியான, மன ரீதியான இன்னல்களைக் கொடுத்தனர்.

ஒரு மனிதனை எந்தளவிற்குக் கேவலமான முறையில் நடத்த முடியுமோ, பேச முடியுமோ அவ்வாறு நடத்தினர், பேசினர். விசாரணைக்கென்று சட்டப்புறம்பாக அழைத்துச் சென்று நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய 19ஆம் தேதி வரை என்னைக் குளிக்கவும் பல் தேய்க்கவும் கூட அனுமதிக்கவில்லை. 19ஆம் தேதி ஆய்வாளர் ரமேஷ் என்னருகில் வரும்போது என்னிடமிருந்து வீசிய கெட்ட வாடையை பொறுக்க முடியாமலே குளிக்க அனுமதித்தார். மேலும் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததாலும் அனுமதி வழங்கப்பட்டது.

குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று கூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள். அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக் காவல் நாட்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.

இவ்வழக்கில் எவ்வாறு பல நிரபராதிகள் குற்றம் சாட்டப்பட்டனர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் கூற முடியும். எனது சட்டவிரோத காவலின்போது ஒருநாள் துணை தலைமை ஆய்வாளர் சிரிகுமார் என்பவர் என்னிடம் வந்து, டேய், உன் ஊருக்கு பக்கத்தில் உள்ள கோலார் தங்கவயல் தான் எனது ஊரும். நான் கூறும் மூன்று பொருட்களில் ஒன்றை இருக்கும் இடம் கூறு. உன்னை விடுதலை செய்துவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் எதை சார் கேட்கிறீர்கள் என்றேன். அவர் கூறினார், ஒன்று ஏ.கே.47 துப்பாக்கி அல்லது ஒயர்லெஸ் கருவி அல்லது தங்கக் கட்டிகள் புதைத்து வைத்துள்ள இடம், இவற்றில் ஒன்றை கொடுத்துவிட்டால் விட்டுவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் இருந்தால்தானே கொடுப்பேன். இல்லாமல் எவ்வாறு கொடுப்பது என்று கேட்டேன். அப்படியானால் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

இந்தத் துணைத் தலைமை ஆய்வாளர்தான் கோடியக்கரை சண்முகம் கொலையான சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்டவர் என்பதையும், இலண்டனில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை திருட விட்டுவிட்டேன் என்று கூறியவர் என்பதையும் இங்கு தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இரவு, பகல் 24 மணி நேரமும், காலைக் கடன்களை முடிக்கும்போதும் கூட கைகளில் விலங்குகளோடுதான் வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போது மட்டும் ஒரு கையை தளர்த்தி விடுவர். படுக்கும்போதுகூட விலங்கு பூட்டியே இருக்கும். இவ்வாறான கொடுமைகள் புரிந்தனர். மேலும் பல அதிகாரிகள் பல மாறுபட்ட பாணியில் துன்புறுத்தினர். அனைவரின் துன்புறுத்தலும் கடுமையானதாக, இரக்கமற்றதாக இருந்தது.”

***************************

உண்மைக் குற்றவாளிகளை தப்ப விடும் தியாகராஜன் போன்ற நேர்மையற்ற அதிகாரிகள், காவலர்களின் துன்புறுத்தல்களினால் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் மடியப்போவது மூன்று உயிர்கள் மட்டுமல்ல; மனித உரிமையும் நீதியும்தான். இந்த நிரபராதிகளைக் காப்பாற்ற நாம் என்ன செய்யப்போகிறோம்?

References :
1. Ex-CBI man alleges Cong hushed up nun murder
http://ibnlive.in.com/news/excbi-man-alleges-cong-hushed-up-nun-murder/70344-3.html

2. Frontline – 20-dec-2008 – Twists & turns : The Abhaya case gets a fresh lease of life 16 years after the young nun’s death with the arrest of two priests and a nun.
http://www.hindu.com/fline/fl2526/stories/20090102252604100.htm

3. Wikipedia – Sister Abhaya murder case
http://en.wikipedia.org/wiki/Sister_Abhaya_murder_case

4. உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி : பேரறிவாளன்
http://perarivalan.blogspot.com/2007/01/blog-post.html

5.Judgement by Supreme Court (Justice Quadri)
http://cbi.nic.in/dop/judgements/quadari.pdf

6. Judgement by Supreme Court (Justice D P Wadhwa)
http://cbi.nic.in/dop/judgements/wadwa.pdf

7. Judgement by Supreme Court (Justice K T Thomas)
http://cbi.nic.in/dop/judgement/thomas.pdf

July 29, 2011

இந்து தீவிரவாதம் – வெளிவரும் உண்மைகள்

“இந்து தீவிரவாதம்” என்பது இன்று நாடு முழுவதும் மெல்ல பரவிவரும் உண்மை. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஏழு சம்பவங்கள் இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை,  ஜூலை 19 2010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.

2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன். இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, ஜிகாதி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்துவந்த காவல்துறையும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன.

bajrang_dal_350முஸ்லிம்களின் புனிதத்தளமான தர்காவில் ஜிகாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா  என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை. தேவேந்திர குப்தா கைதுசெய்யப்பட்டு, இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைக்காட்டும் வரை,  சந்தேகத்தின் கண்கள் அணைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன. பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள். ஆனால் இப்போது “இந்து மதத்தைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரனை போய்க்கொண்டிருக்கிறது” – என்று இராஜஸ்தான் மாநிலத்தின்  தீவிரவாத ஒழிப்பு படையின் (Anti Terrorist Squad – ATS)  தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்.

2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதிராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami – HuJI) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று ஹைதிராபாத் போலீஸ் அறிவித்தது.  அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐ கைது செய்தது.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட, உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்போனும் சிம் கார்டும் கொண்டு இயக்கப்பட்ட அதேவகையான வெடிகுண்டுதான் ஹைதிராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்புமுணை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அஸ்வனி குமார் என்ற சி.பி.ஐ இயக்குனர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது.  அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ கண்டுபிடிக்கும்வரை ஹைதிராபாத் போலீஸின் கட்டுக்கதையே தொடர்ந்தது.

அதே காலகட்டத்தில், கோவா குண்டுவெடிப்புச் சம்பவம்  தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency – NIA)  குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த பூனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள் மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள்  இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்துல் சமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஸ்ட்ரத்தின் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது.  ஆனால் அப்துல் சமது மீது இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, அதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன. 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, மகாராஸ்ட்ராவில் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் (Abhinav Bharat-AB) என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது. கைகாட்டியது. கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைதான். இந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்கவேண்டும்.

ajmer_Oct11_2007
 
ஹைதிராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் இந்துத்துவ அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன.  2002-03வாக்கில் போபால் இரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக இராம்நாராயன் கல்சங்கர, சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள் மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதைவைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடிகுண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

2006 ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட், கான்பூர் ஆகிய ஊர்களில்  இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடிவிபத்துகள் நிகழ்ந்தன. அதே ஆண்டில் மகாராஸ்ட்ராவில் உள்ள புர்னா, பர்பானி, ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில்ள் சிறிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. நண்டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டுவந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்காக செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும், முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.

இவைகளைக் கொண்டே இந்து தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் குறித்து இந்த வருட மே-ஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்தபோது சிலர் இந்து தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்கலாம். இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.

”கடந்த 10 ஆண்டுகளாகவே வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவன்னம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய கதைகளெல்லாம் விசாரிக்கப்படமலேயே இருக்கின்றன” – என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.

மெக்கா மசூதி, மலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், மேற்கொண்டு விசாரணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.ஐ இப்போதுதான் ஆலோசித்தி வருகிறது .
 
2008 செப்டம்பர் 29இல் மலேகான் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், இன்னும் அதிகமானோர் காயமடைந்தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில், சத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார், பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்தபோது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்கும் ஆர்.டி.எக்ஸ் (RDX) வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளான். ஹைதிராபாத் போலீஸ் ஏற்கனவே ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்டதனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறத்தப்பட்டனர். அஜ்மீர் சம்பவத்திலும் மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில்கொள்ளவும்.

malegaon_blast_3604,528 பக்கங்களை கொண்ட மலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகையில் அபிநவ் பாரத் அமைப்பின் பிரமாண்டமான முழுவடிவமும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. “இந்து புனிதத்தளங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும்” என்றும் “தனி இந்து தேசத்தை” உருவாக்கவேண்டும் என்றும்  தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட புரோகித்தும், சத்வியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர். அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு  பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005-06 ஆண்டுவாக்கில் புனேவில் தற்போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, “தனி இந்து தேசம்” அமைப்பதை முக்கிய குறிக்கோளாக  கொண்டு அரம்பிக்கப்பட்டுள்ளது.

மலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினைவாக மலேகானில் ஒரு இடத்திற்கு “கர்கரே சந்திப்பு” என்று பெயரிட்டுள்ளனர். செப்டம்பர் 8, 2006 இல் மலேகானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள்  (சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ) கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன – முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித், சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், சம்பவம் நடந்த அன்று மலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்திருக்கவில்லை. ஆனால் போலீஸால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை போலீஸ் காவலில்தான் இருந்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோசி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்தான் தீவிரவாத ஒழிப்பு படை நம்புகிறது. 2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சத்வி, அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மலேகான் குண்டுவெடிப்பை நடத்தியதாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS. 68 பாகிஸ்தானியர்கள் கொலைசெய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியிடப்படாத சாட்சி ஒருவர் புரோகித்துடன் நடத்திய தொலைபேசி உரையாடலை ஆதாரமாகக் காட்டுகிறது ATS.

இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன. முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயன் கல்சங்ரா, சுவாமி அசீமானந்த் உட்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம். மகாராஸ்ட்ரா , இராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுபடி சத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் “கல்சங்கரா” என்பதால், அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது. அஜ்மீர், மெக்கா மசூதி, மலேகான், சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் மற்றும் பல குண்டுவெடிப்புகளும் ஒரு பெரிய சதிதிட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்த சம்பவங்களையெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஐ வெளிகொண்டுவந்தால் மட்டுமே, இந்து தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும். 

(Source : Article titled ‘Hindu Terror – Conspiracy of silence’ by Smruti Koppikar, published in ‘The Outlook “, a weekly news magazine, dated July 19, 2010.)

http://www.outlookindia.com/article.aspx?266145

தமிழாக்கம்: பிரபாகரன்

(24-ஜூலை-2010 அன்று கீற்று இணையதளத்தில் வெளிவந்தது)